போதகர். பிரான்சிஸ் டிக்சன் அவர்கள் 1910 இல் பிறந்து, 1929 இல் நிக்கல்சன் என்கிற அயர்லாந்து நற்செய்தி பணியாளர் மூலம், ஆண்டவரை ஏற்றுக் கொண்டார் . ஆண்டவரின் ஊழியத்திற்கென அழைப்பு பெற்ற பின்னர், அவர் 1940 முதல் 1946 வரை பல்வேறு சபைகளில் ஊழியம் செய்து 1946 இல் லேண்ட்ஸ்டவுன் பாப்டிஸ்ட் சபையின் போதகர் ஆனார். அவரது வருகைக்குப் பின் அச்சபையும் வேகமாக வளர்ந்தேறினது.
டிக்சன் அவர்கள் வரம் பெற்ற வேத போதகர், நற்செய்தியாளர். நற்செய்தியினை எளிய முறையில், உள்ளத்தைத் தொடும்படியாகவும் எடுத்துக் கூற வல்லவர். அவரது செய்திகள் ஆழமாக இருப்பினும், பாமரரும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையாகவும் இருக்கும். அவர், தமது வேத பாடங்களை அச்சிட்டு, சபையாருக்கு விநியோகிக்க ஆரம்பித்தார். விரைவில் அவை அவரது சபையாருக்கு மாத்திரமல்லாது பிற நாடுகளில் உள்ள 40,000 பேருக்கு அஞ்சல் வழியாகவும் அனுப்பப்பட்டு வந்தது அவரது வேத பாடக்குறிப்புகள், பிரசங்கங்கள், ஆன்ம ஆகாரத்திற்கு ஏங்கும் பல்வேறு நிலையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், அலுவல் மிகுதியால் அவதியுரும் போதகர்களுக்கும், ஏற்ற வரப்பிரசாதமாக இருந்தது. இப்படி அச்சிட்டு செய்திகளை வெளியிடுவதில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். அவரது செய்திகளை ஒலிவடிவில் பதிவு செய்து, அவரது சபையார் பிறருக்கு கொடுத்து வந்தனர். சபை ஊழியத்தில் இருந்து அவர் 1975இல் ஓய்வு பெற்றாலும் 1985 ஜனவரியில் தமது மரணம் வரை பல்வேறு வகைகளில் ஊழியத்தில் ஈடுபட்டு அயராது உழைத்து வந்தார்.